குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று கடந்த மார்ச் மாதம் பதிவாகியிருந்தது.
குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்திருந்தார்.
இதன்போது உறவினர்களின் அனுமதியுடன் மூளைச்சாவடைந்த மாணவியின் இதயம் மற்றும் நுரையீரல்கள் என்பன இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மருந்துவ நிபுணருக்கு இவ்விரு உறுப்புகளும் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், 46 வயதான வைத்தியருக்கு, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிக்கல்களுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கடந்த சனிக்கிழமை (29.04.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றிய குறித்த வைத்தியருக்கு கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்களால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
இவ்வாறு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் இருந்த வைத்தியர், மாணவி விஹகனா ஆரியசிங்கவின் உறுப்புகளை பெற்றுக்கொள்ள முடிந்ததையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், மருத்துவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விதம் குறித்து சுகாதாரத்துறைக்குள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2017ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர் அனில் அபேவிக்ரமவின் சேவையை பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும், அவர் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தும் சத்திரசிகிச்சையை செய்ய மறுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் இந்திய வைத்தியர்கள் குழுவுடன் இணைந்து இந்த வைத்தியரின் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இலங்கையில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் நோயாளிக்கு சிக்கல்கள் உள்ளதா என பரிசோதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மயக்க மருந்து நிபுணரின் மரணம் சத்திரசிகிச்சையின் சிக்கலால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்டதா என்பதை அறிய கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் இது தொடர்பில் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த சத்திரசிகிச்சை தொடர்பில் ஊடகங்களுக்கு எந்த தகவலையும் வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கையில் வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.