இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
இதனிடையே, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் நப்லஸ் நகரில் உள்ள சோதனைச்சாவடியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு காரில் வந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை குறிவைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அதை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.