Monday, January 27, 2025
HomeLatest Newsஆர்ப்பாட்டத்தின் போது கடமை மீறிய பொலிஸ்மா அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு!

ஆர்ப்பாட்டத்தின் போது கடமை மீறிய பொலிஸ்மா அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு!

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் (IGP) சந்தன டி.விக்ரமரத்ன தவறிவிட்டார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழு நேற்று செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அமைதியாக போராடியவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க தவறியதன் மூலம்,பொலிஸ் மா அதிபர், தெளிவாக கடமையை மீறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் ஒன்றுகூடியிருந்தனர். தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவை ராஜினாமா செய்ய வேண்டாம் என கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ராஜபக்ச ஆகியோர் அலரி மாளிகையில் உரையாற்றியிருந்தனர்.

மேலும் நாமல் ராஜபக்ச அவர்களுடன் பேசுவதையும் சமூக ஊடகங்கள் வழியாக காணக்கூடியதாக இருந்தது.

இதைதொடர்ந்து, கூட்டத்தினர் அலரிமாளிகைக்கு வெளியே, மைனா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை தாக்கியிருந்தனர்.

பின்னர் கோட்ட கோ கமவை நோக்கி நகர்ந்த கூட்டத்தினர், அங்கிருந்த போராட்டக்காரர்களை தாக்கி அங்கிருந்த பல கொட்டகைகளுக்கு தீ வைத்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை குழு, மூத்த பொலிஸ் அதிகாரிகள், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, மூத்த அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டது.

இந்த முக்கியமான சம்பவம் தொடர்பில், முன்கூட்டியே தகவல்களை பெறாததற்கு, பாதுகாப்பு செயலாளரின் கீழ் உள்ள புலனாய்வு பிரிவு, மாநில புலனாய்வு பிரிவினரே காரணம்.

பொலிஸ் மா அதிபரின் கடமை மீறல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொலிஸ் மா அதிபரின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

கொழும்பில் போராட்டம் நடத்தும் இடங்களில் கடமையாற்றிய, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை நடத்த வேண்டும்.

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண முடிந்தால், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு பொலிஸ் தரப்பு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்” என பரிந்துரைத்துள்ளது.

Recent News