தெளிவுப்படுத்தாமல் சுங்க திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள பால்மா தொகையை தடுத்து வைத்துள்ளமையால், அரசாங்கத்திற்கு 145 மில்லியன் ரூபா வரி பணம் கிடைக்காது போயுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் அங்கத்தவரான லக்ஷ்மன் வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட 4 லட்சம் கிலோகிராம் பால்மாவை விடுவிக்காது சுங்கம் தடுத்து வைத்துள்ளதன் காரணமாக அந்த பால்மா நுகர்வுக்கு பொருத்தமற்றதாக மாறக்கூடும் என அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் அங்கத்தவரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுங்க திணைக்களம், லக்ஷ்மன் வீரசூரியவிற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட 6 கொள்கலன் பால்மா கடந்த 14 ஆம் திகதி மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இறக்குமதி சட்டத்திட்டங்களை மீறி சட்டவிரோதமாக பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, உரிய சட்டத்திட்டங்களை மீறி பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவரான லக்ஸ்மண் வீரசூரிய, தடுத்து வைக்கப்பட்டுள்ள பால்மா நுகர்வுக்கு பொருத்தமற்றதாக மாறும் பட்சத்தில் ஆறாயிரம் லட்சம் ரூபா நட்டம் ஏற்படும் என குறிப்பிட்டார்.
அதேபோன்று அரசாங்கத்திற்கு 145 மில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்காது போகும்.
எனவே, பால்மாவை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம், சட்டவிரோதமாக பால்மாவை கொண்டு வர முடியாது.
அவ்வாறு கொண்டு வருவதற்கு அது தடை செய்யப்பட்ட பொருள் அல்லவென்றும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.