Thursday, January 23, 2025
HomeLatest Newsஅதிகமாக டிவி பார்த்த மகன்.... விடிய விடிய பெற்றோர் கொடுத்த கொடூர தண்டனை!

அதிகமாக டிவி பார்த்த மகன்…. விடிய விடிய பெற்றோர் கொடுத்த கொடூர தண்டனை!

தங்களது எட்டு வயது மகன் அளவுக்கு அதிகமாக டிவி பார்ப்பதால், அவனுக்கு தக்க பாடம் புகட்ட பெற்றோர் கொடுத்த தண்டனை சமூக வலைதளத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த பெரும் விவாத்தையே எழுப்பியுள்ளது. 

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக அவர்கள் பெற்றோர் கவலையடைந்துள்ளனர். பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடங்களை முடித்த உடன், இரவு 8.30 மணிக்கு தூங்க செல்ல வேண்டும் என அந்த சிறுவனக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

இருப்பினும், அந்த சிறுவன் தாங்கள் இல்லாத நேரங்களில், வீட்டுப்பாடங்களை முடிக்காமல், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அவர்கள் வீட்டிற்கு வரும்போது, வீட்டுப்பாடங்களை முடிக்காமல் சிறுவன் தூங்கிவிடுபவதும் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. 

பல நாட்களாக இது தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், சொல் பேச்சை கேட்காத மகன் மீது ஏற்பட்ட கோபத்தில் ஒருநாள், வீட்டிற்கு வந்தபோது தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை எழுப்பி, தொலைக்காட்சி இருக்கும் அறைக்கு அவனது தாயார் அழைத்து வந்துள்ளார். 

அவனை அங்கு அமரவைத்து, தொலைக்காட்சியையும் வைத்துக்கொடுத்து, இரவு முழுவதும் தூங்காமால் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என அந்த சிறுவனுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். தண்டனை கொடுத்தது மட்டுமல்லாமல், தாய், தந்தை இருவரும் அந்த சிறுவன் அருகேயே உர்கார்ந்து, அவர் தூங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதை உறுதிசெய்துள்ளனர். 

முதலில், இதை பொருட்படுத்தாத அந்த சிறுவன் நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளான். ஆனால், சிறிதுநேரத்திலேயே அவனுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. அவனால் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்க முடியவில்லை. தொடர்ந்து அவனால் தூக்கத்தை அடக்க முடியவில்லை. 

ஒருகட்டத்தில், கதறி அழுத சிறுவன் தன்னை தூங்கவிடும்படி தனது தாயாரிடம் கெஞ்சியுள்ளான். ஆனால், அப்போதும் அவர்களின் பெற்றோர் அந்த சிறுவனை தூங்க அனுமதிக்கவில்லை. 

இதன் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வைரலாகின. அதாவது, அந்த அறையில் இருந்த சோபாவில் கண்ணில் தூக்கத்தால் சொக்கிவிழும் அளவில் இருக்கும் சிறுவனை, அவனது தாயும், தந்தையும் தூங்கவிடாமல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வைத்தது அதில் பதிவாகியுள்ளது. கடைசியில் இரவு முழுவதும் அந்த சிறுவனை தூங்க அனுமதிக்காமல், அதிகாலை 5 மணிக்குதான் தூங்கவிட்டுள்ளனர். 

சீன பெற்றோரின் இந்த செயல், சிறுவனுக்கு பாடம் புகட்டுவதற்கு என்று எடுத்துக்கொண்டாலும், இது மிகவும் மோசமான குழந்தை வளர்ப்பு முறை என இணையத்தில் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

இருப்பினும், சிலரோ இந்த செயலுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் கூறுகையில், ‘கண்டிப்புடன் நடந்துகொள்வதால் எனது மகனின் நடத்தை சீர்ப்பட்டுள்ளது’ என்றார். 

Recent News