Saturday, November 23, 2024
HomeLatest NewsIndia Newsஉயிரோடு சவக்கிடங்கில் போடப்பட்ட மகன்..!மீண்டும் உயிர் கொடுத்த தந்தை..!நெகிழ்ச்சி சம்பவம்..!

உயிரோடு சவக்கிடங்கில் போடப்பட்ட மகன்..!மீண்டும் உயிர் கொடுத்த தந்தை..!நெகிழ்ச்சி சம்பவம்..!

தந்தை ஒருவர் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததுடன்,900 ற்கு அதிகமானோர் காயமடைந்தனர்.

ரயில் விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் அறிந்த ஹெலராம் மாலிக் என்ற தந்தைக்கு தனது 24 வயதான பிஸ்வாஜித் மாலிக் என்பவரை ரயில் ஏற்றி விட்டது நினைவு வந்துள்ளது.

உடனடியாக மகனிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ள நிலையில், மகன் உயிருடன் இருப்பதும் ஆனால் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து துடித்து போய் 230 கிலோ மீட்டர் தொலைவில் விபத்து நடந்த இடத்திற்கு ஒரு ஆம்புலன்ஸில் உறவினருடன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற மகனை எங்கு தேடியும் கிடைக்காமையால் மருத்துவமனைகளில் சென்று தேடியுள்ளனர். அங்கும் மகனை காணவில்லை. இறுதியில் அந்த தந்தைக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கான முகவரி கிடைத்துள்ளது.

அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களைக் காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்களுடன் அவர் வாதாடிய வேளை பலியானவர்களின் உடல்களுக்கு இடையே ஒருவரின் கை அசைவதைக் கண்டு அங்கு சென்று பார்த்த பொழுது அது அவரது மகன்.

பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிஸ்வாஜித்தை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றிக் முதலுதவி செய்து கொல்கத்தாவுக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முதற்கட்ட அறுவை சிகிச்சையின் பின்னர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், கால்களில் மட்டுமே அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறாக சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவத் துறையை சாராதவர்கள் என்பதால் படுகாயமடைந்து நினைவிழந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளாமல், சவக்கிடங்கில் போட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Recent News