அமெரிக்காவில் அண்மையில் விலை குறைப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தமக்கு தேவையான வாகனங்களை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் மும்முரமாக இறங்கியுள்ள போதிலும் வாகனங்களின் விலைகளில் இன்னும் விலைக்குறைப்பு செய்யப்படவில்லை என தமது விசனங்களை வெளிப்படுத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது உலகளவில் காணப்பட்டு வரும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு காரணமாக மின்சார வாகனங்களுக்கான மவுசு அதிகரித்து இருக்கின்ற அதேவேளை அமெரிக்க அரசாங்கமும் மின்சார வாகனங்களையே அதிகம் பயன்படுத்துமாறு மக்களை கேட்டு வருகின்றது.
இந்நிலையில் மின்சார வாகனங்களுக்கான விலைகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் சுமார் 58 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும் இதனால் மக்களால் வாகனத்தை வாங்க முடியாத சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ‘போர்ட்’ வாகன நிறுவன அதிகாரி, “மின்சார வாகனத்தின் விலை குறைப்பு குறித்த நாம் கடுமையாக போராடி வருகின்றோம். ஆனால் உலக சந்தையில் காணப்படும் விலையேற்றம் எம்மை வெகுவாக பாதிக்கின்றது. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் பற்றரிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகளின் விலைகள் உலக சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகின்றது. இதனால் எம்மால் விலைக் குறைப்பு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வினை எட்ட முயற்சிக்கின்றோம்” என அவர் தெரிவித்திருக்கின்றார்.