உரத் தட்டுப்பாடு காரணமாக கடந்த பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்தில் ஏற்பட்ட நெற்செய்கை இழப்பு மற்றும் இதுவரை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு தொடர்பில் விவசாய அமைச்சிடம் முறையான தரவுகள் இல்லை என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள்சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தகைய தரவுகளைப் பெற்ற பின்னரே அரிசி இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று சங்கம் (URPA) தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் குசுமிதா எம். பெரேரா தெரிவிக்கையில்:
நாட்டில் போதுமான அரிசி இருப்பு இருந்தால், அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவது நல்லது. ஆனால், அதற்கு முன் பருவத்தில் நெல் அறுவடையில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது, இதுவரை எவ்வளவு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
கடந்த பருவத்தில் இழந்த நெல்லின் அளவைக் கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு தற்போது இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், இறக்குமதியை நிறுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
கடந்த ஆண்டு அரிசி இறக்குமதியை அனுமதித்தபோது அரசாங்கத்திடம் எந்தத் தகவலும் இல்லை. அதேபோன்று அரிசி இறக்குமதியை இடைநிறுத்தத் தயாராகும் போது அதற்கான தரவுகள் அமைச்சிடம் இல்லை.
பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சில சமயங்களில் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராகச் செல்வதால், இந்த முறையில் சரியான தரவுகள் இல்லாமல் முடிவுகளை எடுப்பதால், வரும் மாதங்களில் அரிசி விலைகள் அசாதாரணமாக உயரக்கூடும்.
விவசாயிகளின் நலனைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்கு மேல், மக்கள் சாப்பிட வேண்டும். மக்களிடம் அரிசியை ரூ.10க்கு வாங்க வைக்க முடியாது. விவசாயிகளின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு கிலோ அரசியை 300 ரூபாய்க்கு கொடுப்பது சரியா . எனவே எதிர்வரும் மாதங்களுக்கான அரிசித் தேவையை தற்போதுள்ள அரிசி இருப்புகளைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியுமா என்பதை அமைச்சு முதலில் ஆராய வேண்டும் என்றார்.