Saturday, December 28, 2024
HomeLatest Newsநிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு – கிடைக்காவிடின் அறிவிக்க விசேட இலக்கம்!

நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு – கிடைக்காவிடின் அறிவிக்க விசேட இலக்கம்!

கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 15,404 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈட்டை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் திறைசேரியால் மேற்கொள்வதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

களனி கங்கை, கிங் கங்கை, களு கங்கை, நில்வலா கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மாஓயா போன்ற ஆறுகளை அண்டிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 11,157 குடும்பங்களைச் சேர்ந்த 46,797 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 3443 குடும்பங்களில் 11,648 பேரும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களால் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாகவும், ஐந்து வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 193 வீடுகள் பகுதியளவிலும் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் எனவும், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்காவிடின் 117 என்ற அனர்த்த நிவாரண சேவையின் துரித இலக்கத்தை அழைக்குமாறும் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க வலியுறுத்துகின்றார்.

Recent News