Wednesday, May 22, 2024
HomeLatest Newsபழங்குடி மக்கள் முன் மனம் வருந்திய திருத்தந்தை!

பழங்குடி மக்கள் முன் மனம் வருந்திய திருத்தந்தை!

கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

கனடாவில் கத்தோலிக்க தேவாலயத்தால் இயங்கிய பள்ளிகளில், கனடாவில் பூர்வ பழங்குடிகளாக இருந்த மெடிஸ், இனுய்ட் போன்ற பழங்குடி மக்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர்.

சுமார் 1,50,000-க்கும் அதிகமான பழங்குடிகளின் பிள்ளைகள் 1870-ஆம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு பழங்குடி மாணவர்கள் கலாசார ரீதியாக துன்புறுத்தப்பட்டதோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பிற்காலங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

இந்தச் சூழலில் திருத்தந்தை பிரான்சிஸ் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இதன் போது கனாடாவின் மாஸ்வாசிஸ் நகரில், திங்கட்கிழமை கனடாவின் பழங்குடி மக்கள் சூழ்ந்திருக்க நடந்த நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றினார்.

“மிகுந்த வருத்தத்துடன் இந்த மன்னிப்பைக் கேட்கிறேன். கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடிகளின் மொழி மற்றும் கலாசாரம் அழிய காரணமாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த கொடூரத் தீமைகளுக்கு வெட்கித் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மன்னிப்பு பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளைக் கண்டறிவதற்கான விசாரணையை தீவிரப்படுத்தவும், கடந்த காலங்களில் வலிகளை அனுபவித்த பழங்குடி மக்களுக்கு சிறு மருத்தாகவும் உதவும்” என திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் முன்,பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்காக, திருத் தந்தை தனது மன்னிப்பை பதிவுச் செய்திருப்பது வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.

Recent News