ரஷியாவில் உள்ள டகேஸ்டன் பிராந்தியத்தின் தலைநகர் மகாசகலா விமான நிலையத்திற்கு நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து, ரஷியாவின் ரெட் விங்ஸ் விமானம் வந்தடைந்தது.
இதில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். ஏற்கனவே இஸ்ரேல் மீது கோபத்தில் இருந்த சிலர், கும்பலாக விமான நிலையத்திற்குள் புகுந்து விமானத்தை தரையிறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீன கொடியுடன் விமான ஓடுதளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் கார்களை முற்றுகையிட்டனர்.
விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை பிடித்து, அவர்களுடைய பாஸ்போர்ட்களை சரிபார்த்தனர். அப்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவரா? யூத மதத்தைச் சேர்ந்தவர்களா? என பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென கும்பல் ஒன்று விமான நிலையத்திற்குள் புகுந்ததால், பணியாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிகழ்வால் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் ஓடுதளத்தில் இருந்து கும்பல் வெளியேற்றப்பட்டனர்.
எனினும், நவம்பர் 6-ந்தேதி வரை இந்த விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ”போராட்டக்காரர்களிடம் இருந்து இஸ்ரேல் மக்களை ரஷியா அதிகாரிகள் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, டகேஸ்டன் பிராந்தியம் இஸ்லாமியர் நிறைந்ததாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.