உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவியின் போட்டோ ஷூட் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவரை ட்ரோல் செய்தனர்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஐந்து மாத காலங்களாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் மக்களின் வாழ்வாதாரங்களும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவியுடன், வோக் பத்திரிகைக்காக போட்டோஷூட் நடத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது ஒரு புகைப்படத்தில், ஜெலென்ஸ்கியும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் காணலாம். மற்றொரு படத்தில், இருவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர்.
வோக் பத்திரிகை உக்ரைன் முதல் பெண்மணியின் புகைப்படத்தை வெளிட்டு, அதனை துணிச்சலின் படம் என்று வர்ணித்துள்ளது.
மற்றொரு புகைப்படத்தில், ஒலேனா சேதமடைந்த இராணுவ வாகனத்தின் பிண்ணனியில் போஸ் கொடுத்துள்ளார், ஒரு புகைப்படத்தில், ஒலேனா ஒரு கட்டிடத்தின் படிக்கட்டுகளில் போஸ் கொடுத்துள்ளார். வோக் பத்திரிக்கை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘வோக்கின் பிரத்யேக டிஜிட்டல் கவர் ஸ்டோரிக்காக, ஜெலென்ஸ்காவும் அவரது கணவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியும் போர்க்கால வாழ்க்கை, அவர்களது திருமணம் மற்றும் பகிர்ந்த வரலாறு மற்றும் உக்ரைனின் எதிர்கால கனவுகள் பற்றி பேசுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவியின் போட்டோ ஷூட் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவரை ட்ரோல் செய்தனர். ஒரு ட்விட்டர் பயனர் ‘ ஒரு நடிகரை உங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும்போது, இது தான் நடக்கும். போரின் போதும் அவரது முன்னுரிமை இதுவாகத் தான் இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், ‘அமெரிக்கா 60 பில்லியன் டாலர்களை உதவியாக வழங்கிறது, அதனை அவர்கள் போட்டோஷூட் செய்ய பயன்படுத்துகிறார்கள்’ என பதிவிட்டுள்ளார். பலர் அதை மிகவும் பொறுப்பற்ற தன்மை என விவரித்தனர்.
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனைத் தாக்கியது. போர் தொடங்கி கிட்டத்தட்ட 155 நாட்கள் ஆகிவிட்டது. இது வரை சுமார் 7000 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. டான்பாஸ் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த மூன்று இந்தியர்களை உக்ரைன் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.