Friday, January 24, 2025
HomeLatest Newsபெண்ணை கொன்று சாப்பிட்டு பிரபலமாக மாறிய நபர்...73 வயதில் உயிரிழப்பு!

பெண்ணை கொன்று சாப்பிட்டு பிரபலமாக மாறிய நபர்…73 வயதில் உயிரிழப்பு!

தன்னுடன் படித்த பெண்ணை கொன்று, அவரை வன்புணர்ந்து, அவரின் உடலையே நர மாமிசமாக சாப்பிட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடைசி வரை அதற்கு சிறை செல்லாமல், தற்போது 73 வயதில் காலமாகியுள்ளார். 

ஜப்பானைச் சேர்ந்த இஸ்ஸெய் சகாவா என்பவர், 1981ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வசித்து படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் கல்லூரியில் படித்து வந்த டச் மாணவி ஒருவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். 

வீட்டிற்கு அழைத்து வந்து, அந்த மாணவி கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தொடர்ந்து, அந்த பெண் உயிரிழந்த பின்னரும் அவரை வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பல நாள்களாக அந்த பெண்ணின் உடலை வைத்து, பல்வேறு பாகங்களை ஒவ்வொரு நாளாக நர மாமிசமாக சாப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, மிஞ்சிய உடல் பாகங்களை மட்டும் அருகில் இருக்கும் பார்க்கில் புதைத்துள்ளார். சில நாள்களில் போலீசார் அவரை கைது செய்தனர். அவர்களிடம் சகாவா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 

ஆனால், அவரை விசாரிக்க தகுதியற்ற மனநலம் குன்றிய நபராக பிரான்ஸ் மருத்துவ வல்லுநர்கள் சான்றிதழ் அளித்தனர். தொடர்ந்து, அவர் 1994ஆம் ஆண்டு ஜப்பான் திரும்பினார். 

இருப்பினும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பம் ஜப்பானில், சகாவா மீது வழக்குத்தொடர உறுதியாக இருந்தது. அவரின் நடத்தை ஒழுங்கில்தான் பிரச்னை என்றும், அவரை மருத்துவமனையில் சேர்க்க அவசியமில்லை எனவும் ஜப்பானிய அதிகாரிகள் முடிவுக்கு வந்தார்கள். எனவே, சகாவாவை விசாரிக்க அவர்கள் முடிவு செய்தனர். 

இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் பிரான்ஸில் இருந்து ஜப்பானுக்கு வந்த சேர இயலாததால், அந்த வழக்கில் கொலையாளி சகாவா சிறைவாசம் ஏதுமின்றி விடுதலையானார். 

சகாவா தனது குற்றத்தை மறைக்கவில்லை, மேலும் அதை ஒரு புகழுக்காக பயன்படுத்திக் கொண்டார். “In the Fog” என்ற தலைப்பில் ஒரு நாவல் போன்ற நினைவுக் குறிப்பு புத்தகத்தில், கொலையைப் பற்றிய தெளிவான விவரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1982ஆம் ஆண்டு அந்நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதை வென்ற ஜப்பானிய நாவலாசிரியர் ஜூரோ காராவின்,’Letter from Sagawa-kun’என்ற நாவல், சகாவானின் கொலையை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்டதுதான். 

கொலையின் கொடூரமான விவரங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசினார். அவருக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. சகாவா ஒரு பிரபலம் என்ற நிலையை அடைந்தார். சில ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகளை அளித்து வந்தார்.

அவரின் நிர்வாண பெண்கள் ஓவியங்களுக்காக ஒரு பத்திரிகையில் இடம்பெற்றார். ஒரு ஆபாச திரைப்படத்தில் தோன்றினார். மங்கா காமிக் என்ற ஒரு புத்தகத்தையும் உருவாக்கினார். அந்த புத்தகத்தில் அவரது குற்றத்தை கிராஃபிக் வடிவத்தில் முழு விவரமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

பக்கவாதம் உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்சனைகளுக்குப் பிறகு சக்கர நாற்காலியில் இருந்ததாகக் கூறப்படும் சகாவா தனது சகோதரருடன் தனது இறுதி ஆண்டுகளைக் கழித்தார். ஆனால், அவர் இத்தனை ஆண்டுகளில் தனது கொலைக்கோ அல்லது அவரது நடத்தைக்கோ எந்த வருத்தம் அல்லது திருந்தி வாழ்வதையோ அவர் வெளிப்படுத்தவே இல்லை. 

2013ஆம் ஆண்டு, ஒரு நேர்காணலில் அவரிடம் ஜப்பானின் பெண்களின் போஸ்டர் ஒன்று காட்டப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,”அவர்கள் மிகவும் ருசியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்பதுதான். 

இந்நிலையில், கடந்த நவ. 24ஆம் தேதி, 73 வயதான சகாவா நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரின் சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவரின் இறுதி சடங்கில் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்றும் பொதுமக்களிடம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. 

Recent News