தாய்லாந்தில் 9 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனநாயக முறையிலான ஆட்சி நடைமுறைக்கு வரவுள்ளது.
தாய்லாந்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு இராணுவத்தால் கலைக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் இராணுவ தளபதி பிரயுத் சான் ஈ சா அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். இதனால், இவரது தலைமையிலான இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மன்னர் முறைக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி பொது தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டுள்ளன.
அதன்படி, 500 உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சிகளான மூவ் பார்வர்டு கட்சியும், பியூ தாய் கட்சியும், 200 ற்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், சில கட்சிகளின் ஆதரவுடன் மூவ் பார்வர்டு கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், அக்கட்சித் தலைவரும், பிரபல தொழிலதிபருமான பிடா லிம்ஜாரோன்ராட் (42) பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகின்றது.