பெற்றோரின் கவனமின்மையால் காரில் விட்டுச் சென்ற குழந்தை அதீத வெப்பத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு முதல் நாள் இரவு கணவன் மெக்கெலன் (32), மனைவி கேத்ரீன் (23) ஆகியோர் தமது 4 வயது மற்றும் 2 வயது பெண் குழந்தைகளுடன் காரில் வெளியே சென்றுள்ளனர். இரவு உணவை ஹோட்டலில் முடித்த அவர்கள், பின்னர் ஓரிடத்தில் ஒருவகை போதைப்பொருளை உட்கொண்டுள்ளனர்.
பின்னர் காரில் சுற்றிய அவர்கள் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர். 2 வயது குழந்தை பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் போதையில் இருந்தமையால் பின்னர் குழந்தையை தூக்கிச் செல்லலாம் என நினைத்து 4 வயது குழந்தையை மட்டும் வீட்டிற்குள் கொண்டு சென்றுள்ளதுடன் அப்படியே தூக்கியுள்ளனர்.
மறு நாள் மதியம் 2 வயது குழந்தை காரில் இருப்பது நினைவுக்கு வர ஓடிச்சென்று பார்த்த போது, குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. மேலும், குழந்தையின் உடலை தொட முடியாத அளவுக்கு வெப்பம் இருந்துள்ளது. காரின் வெப்பநிலை அதிகரித்து அந்தக் குழந்தை சுமார் 115 டிகிரி வெப்பநிலையில் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளது.
இந்த திடுக்கிடும் தகவல் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்த நிலையில், பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.