Thursday, January 23, 2025

வவுனியா நகரில் நடமாடித் திரிந்த முதியவர் சடலமாக மீட்பு!

வவுனியா – மில் வீதியில் நேற்று (30.06) இரவு 7.30 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா – மில் வீதி பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் வெளிப்புறத்தில் உள்ள ஒதுக்கு புறமான இடமொன்றில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதை அவதானித்த வர்த்தகர்கள் உடனடியாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு இரவு சென்ற வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரா தலைமையிலான பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ள பொலிசார், குறித்த நபர் வவுனியா நகரப் பகுதியில் நடமாடித் திரிபவர் எனவும், நீலப் பெட்டி சேட்டும், சாரமும் அணிந்துள்ளார். குறித்த முதியவரது சடலத்தை பொறுப்பேற்க அல்லது அடையாளம் காண அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் மேலும் கோரியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரப் பகுதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு பின்புறமாக கடந்த புதன்கிழமை 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos