தீவிரவாத சக்திகளுக்கு கனடா இடமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் இனத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படையாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியமை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர் “ட்ரூடோவின் கூற்று இந்தியாவின் கொள்கைக்கு ஒத்துவரவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக இந்தியா தனது கவலையை அமெரிக்காவிடம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக கனடா உள்ளது என்று கடந்த வாரம் இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் தீவிரவாத சக்திகளுக்கு கனடா இடமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். நிஜ்ஜர் படுகொலை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கனடாவிடம் இருந்தால் அதனை இந்தியா கவனிக்க வேண்டும் என்று கனடா விரும்பினால் அதனை செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது குறிப்பிட்டார்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கனடா தீவிரவாதிகளுக்கும், மத அடிப்படைவாதிகளுக்கும், வன்முறையை தூண்டுபவர்களுக்கும் புகலிடமாக இருந்து, அவர்கள் வெளிப்படையாக செயல்பட அனுமதித்தும் உள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நிலையில், இந்திய தூதர்கள் கனடாவில் உள்ள தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுக்கு செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். அவர்கள் பகிரங்கமாக மிரட்டப்படுவதாகவும், இதனால் இந்தியாவில் விசா சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார செயலர் அண்டனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் விவாதித்துள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.