பழைய இரும்பு வியாபாரம் என்ற பெயரால் தீவகத்தில் கஞ்சா , ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் .
கடந்தவாரம் தீவகம் மண்கும்பான் பகுதியில் புத்தளத்தினை சேர்ந்த ஒரு நபர் 120 கிலோ கேரளகஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டிருந்தார் .குறித்த நபர் பழைய இரும்பு , பிளாஸ்ரிக் சேர்க்கும் வியாபாரத்தினை மேற்கொண்டுவந்தவராவார் .
மேற்படி வியாபாரத்தினை மேற்கொள்பவர்கள் புத்தளம் , யாழ்ப்பாணம் பொம்மைவெளி , ஐந்துசந்தி போன்ற பகுதிகளிலிருந்தே தீவகத்திற்குள் நுழைகின்றனர் .
சிலவருடங்களுக்கு இக்கும்பல்களால் தீவகத்தில் பல திருட்டு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன . அதேபோன்று சட்டவிரோத மாட்டிறைச்சி கடத்தலிலும் ஈடுபட்டிருந்த இக்கும்பலின் பல நபர்கள் புங்குடுதீவிலும் , வேலணையிலும் கையும்மெய்யுமாக அகப்பட்டிருந்தனர் .
மேற்படி வியாபாரிகள் தீவகத்துக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாதென்றும் அவ்வாறு நுழைவதாயின் வேலணை பிரதேச சபையில் பதிவு செய்யப்படவேண்டுமென்றும் 2018 ல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களினால் பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்ததோடு அப்பிரேரணையின் பிரதி ஊர்காவற்துறை பொலிசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் வேலணை பிரதேசசபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கூறியிருந்தார் .
அதன் பிற்பாடும் தீவகத்துக்கும் நுழைந்த வாகனங்கள் சமூக ஆர்வலர்களால் தாக்கப்பட்டமையால் அவற்றின் உள்நுழைவானது கணிசமாக குறைவடைந்திருந்தது . ஆனாலும் 2021 லிருந்து மேற்படி வாகனங்களின் உள்நுழைவானது வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது .
எரிபொருள் விலையேற்றம் , தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையிலும் யாழ்நகரிலிருந்து சுமார் 35 கிலோமீற்றர் பயணித்து பழைய இரும்பு , உடைந்த கதிரைகள் சேகரிக்கும் பெயரில் இக்கும்பல் தீவுக்குள் உள்நுழைகின்றது .
தினமும் இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் இதோ உங்களுக்கு அரிய வாய்ப்பு ! பழைய இரும்புக்கு புத்தம் புதிய பிளாஸ்ரிக் வாளிகள் , கதிரைகள் வழங்கப்படுமென்று ஒலிபெருக்கியில் அறிவித்தவாறு நாள் முழுவதும் உலாவி வருகின்றனர் .
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவே இக்கும்பல் தினமும் தீவுக்குள் நுழைவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் .
போர் உக்கிரமாக நடைபெற்ற வன்னியில் காணப்படாத பழைய இரும்புகளா தீவகத்தில் காணப்படுகின்றதென்றும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர் .
மதுபாவனைக்கு அடிமையாகியுள்ள சிலரால் இங்கு காணப்படுகின்ற ஆட்களற்ற வீடுகள் உடைக்கப்பட்டு மேற்படி வியாபார கும்பலிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையும் காணப்படுகின்றது .
சிலமாதங்களுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்ற தீவக கிரிக்கெட் மைதானமொன்றில் காணப்பட்டிருந்த 40000 ரூபாய் பெறுமதிமிக்க முட்கம்பிகள் மேற்படி கும்பலால் திருடப்பட்டிருந்த நிலையில் புங்குடுதீவு J / 26 கிராமசேவகரின் முயற்சியினால் முட்கம்பிகள் மீட்கப்பட்டிருந்தன .
அதேபோன்று மேற்படி மைதானத்தில் காணப்பட்டிருந்த 25000 ரூபாய் பெறுமதிமிக்க ஏணியொன்றும் மேற்படி கும்பலால் திருடப்பட்டிருந்தது . இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும் இன்றுவரைக்கும் அவர்களால் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை .
மேற்படி சட்டவிரோத கும்பலினை கட்டுப்படுத்தும் அதிகாரம் வேலணை பிரதேச சபையின் தவிசாளரிடமே காணப்படுகின்றபோதிலும் எவ்வித அக்கறையும் அவர் செலுத்துவதாக இல்லை .
மேற்படி சட்டவிரோத கும்பலுக்கும் ஈபிடிபியினருக்குமிடையில் மறைமுக ஒப்பந்தம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம்சுமத்துகின்றனர் .