சீனாவின் வடமேற்கு பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் கான்சு மாகாணம், ஜிஷிஷன் மாவட்டத்தில் உள்ளூா் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவுஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.9 முதல் 6.2 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த கின்காய் மாகாணமும் குலுங்கியது. ஜிஷிஷன் மாவட்டத்தின் தலாநகரான டாங்ஸியாங் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் உள்ள லியுகூ பகுதியில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
நிலநடுக்க மையம் கான்சு, கின்காய் ஆகிய இரு மாகாண எல்லைக்கோட்டுக்கு வெறும் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருந்ததால் இரு மாகாணங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. இதில், கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினா். இரு மாகாணங்களிலும் கிட்டதட்ட ஆயிரம் போ் காயமடைந்தனா்.
மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்தான் மிக மோசமானது என்று கூறப்படுகிறது.