Tuesday, December 24, 2024

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் கரிசனையை நிராகரிக்க முடியாது! – தயாசிறி

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள விடயங்களை நிராகரிக்க முடியாது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்ட அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தவர்கே தற்போதைய அரசாங்கத்திலும் இருக்கின்றனர்.

எனவே தான் அரசாங்கம் இதனை மறுத்துள்ளது. ஆனால் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்றுள்ள பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சு.க.வின் நிலைப்பாட்டை வினவிய போதே தயாசிறி ஜயசேகர கேசரிக்கு இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும், அதன் போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் மாத்திரமே பேசப்பட்டு வந்தது.

இந்தக் காரணிகள் தொடர்பில் கடந்த ஜெனீவா கூட்டத்தொடரின் போது கூட இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. இம்முறை கூட்டத்தொடரிலும் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளது.

இவ்வாறு கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளையும், இனி வரப்போகும் பிரேரணைகளையும் எதிர்கொள்வது என்ற பாரிய சவாலை நாடு எதிர்கொண்டுள்ளது.

இந்த சவால்களுக்கு மத்தியில் இம்முறை ஐ.நா.வில் பொருளாதார குற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக பொருளாதார குற்றங்களால் இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. அவதானம் செலுத்தியுள்ளது.

எனவே கடந்த காலங்களை விட தற்போது முன்வைக்கப்படவுள்ள பிரேரணை இலங்கைக்கும் கடும் பாதகமானதாக அமையக்கூடும்.

எவ்வாறிருப்பினும் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. அறிக்கையில் ஆழமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காமை மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்பு கூறத்தவறியுள்ளமை உள்ளிட்ட காரணிகள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆனால் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்குள்ள ஆணையின் படி அவரால் மனித உரிமைகள் மாத்திரமே பேச முடியும் என்பதால், பொருளாதார குற்றங்கள் தொடர்பில் முன்வைத்துள்ள காரணிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எமது அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த பதில் பொறுத்தமற்றதாகும். பொருளாதார ரீதியில் எடுக்கப்பட்ட முட்டாள் தனமான தீர்மானங்களே நாடு இவ்வாறு வங்குரோத்தடைந்துள்ள மைக்கான பிரதான காரணியாகும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற முடியும்?

உண்மையில் பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்ற அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் உள்ளனர்.

எனவே தான் அவர்கள் ஐ.நா. அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேசத்தில் கேள்வி எழுப்பப்படுகின்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இருந்த போதிலும், ஐ.நா. வலியுறுத்தியுள்ள விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

ஏனைய விவகாரங்களைப் போன்றே பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும்.- என்றார்.

Latest Videos