Tuesday, December 24, 2024
HomeLatest Newsஎலுமிச்சை பழத்தை சேமிக்கும் சீனர்கள்! - ஏன் தெரியுமா?

எலுமிச்சை பழத்தை சேமிக்கும் சீனர்கள்! – ஏன் தெரியுமா?

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளால் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. 

நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை சீனர்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.

வைட்டமின் சி இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என்பதால் அது அதிகம் நிரம்பி இருக்கும் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். 

அதனால் அங்கு எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆரஞ்சு பழங்களையும் போட்டி போட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். 

இந்தப் பழங்களை உட்கொள்வது நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு ஏதுவான நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளதும் அவற்றின் தேவை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

எலுமிச்சை, ஆரஞ்சு பழங்கள் மட்டுமல்ல உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் உணவு பொருட்கள் நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கின்றன.

அவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும். நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக்கொள்ளலாம். 

இஞ்சி: பெரும்பாலும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்த்தண்டுகளில் இருக்கும் மூலக்கூறுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இஞ்சியை உணவில் சேர்க்க முடியாவிட்டால் இஞ்சித் துண்டுகளை நீரில் கொதிக்கவைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பருகலாம். 

மஞ்சள்: நாடு முழுவதும் சமையலறைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உணவுப்பொருள் இது. மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

கீரை: இதில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. குடைமிளகாயிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 

பூண்டு: ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் வைரஸை எதிர்த்து போராடும் டி-செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பூண்டு உதவும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் பூண்டுச் சாறு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கும் தன்மை கொண்டது. 

வைரஸ் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு பூண்டு உதவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முட்டை: இதில் புரதம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. மேலும் முட்டையில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு முக்கிய பங்களிப்பு செய்கிறது. 

மீன்: மீன் மற்றும் மீன் எண்ணெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க துணைபுரியும். நோய்த்தொற்றுக்களையும் எதிர்த்துப் போராடும்.

Recent News