Sunday, November 17, 2024
HomeLatest Newsஅமெரிக்காவிற்கு சவாலாக விஸ்வரூபம் எடுத்த சீன கடற்படை. 

அமெரிக்காவிற்கு சவாலாக விஸ்வரூபம் எடுத்த சீன கடற்படை. 

தாய்வான்-சீனா. இந்த இரண்டு நாடுகளிற்கும் இடைப்பட்ட முரண்பாடுகள் இன்று நேற்று அல்ல. காலம் காலமாக இருந்து வருகின்றது.

அதாவது தாய்வானை தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத சீனா, தாய்வான் தனது பெருநிலப்பரப்பில் ஒரு பகுதியெனக் கூறி அதன் இஷ்டத்திற்கு போர் விமானங்களையும் ரோந்து படகுகளையும் தாய்வான் பரப்பிற்குள் மீண்டும் மீண்டும் அனுப்பி வந்துள்ளது.

அதேவேளை தாய்வானைக் காப்பாற்றுவதாக வாக்குறுதியளித்து அமெரிக்கா தாய்வானிற்கு தொடர்ந்து இராணுவ ஆதரவுகளையும், போர்த்தளபாடங்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அது மாத்திரமன்றி இந்த வருட ஆரம்பத்தில், அமெரிக்க வீரர்கள் தாய்வான் இராணுவ வீரர்களிற்கு பயிற்சியளிப்பதாகவும் இந்த இரகசிய நடவடிக்கை ஒருவருடத்திற்கு மேல் நடைபெற்று வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் சீனா இதனை தாய்வானிற்கு மாத்திரம் செய்யவில்லை. பிலிபைன்ஸ், ஜப்பான் போன்ற அருகில் உள்ள பசுபிக் பிராந்திய நாடுகள் பலவற்றுடன் ஏதோ ஒரு விதமான எல்லை விவகாரங்களைக் கொண்டிருக்கிறது.

அவ்வாறு இருக்க அமெரிக்காவின் கவனம் முழுதும் தாய்வான் மீது மாத்திரம் செல்வதற்கான காரணம் என்ன? இந்த கேள்விக்கு பதில் கூறும் முன்னர் இன்றைய கட்டத்தின்படி, இன்னொரு கேள்விக்கும் பதில் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவைத் தடுத்து நிறுத்த உண்மையில் அமெரிக்காவால் முடியுமா என்பது.

ஆச்சரியத்திற்கு உரிய விடயம் என்னவென்றால், தாய்வானிற்கு அடைக்கலம் தருகிறோம் என வாக்களித்திருக்கும் அமெரிக்காவிற்கு நேரடியாகவே சவால் விடுகிறது சீனா.

ஆனால் அதனை எதிர்கொள்ளக்கூடிய படை பலம் அமெரிக்காவிடம் இல்லை என அண்மையில் சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்நிலையில் தாய்வானிற்கு அமெரிக்காவின் ஆதரவு எந்தளவு தூரம் பயனுடையதாக இருக்கும்? இந்த விடயங்களை விரிவாகப் பார்க்கலாம். 

முதலாவதாக அமெரிக்காவிற்கு தாய்வான் மீது ஏன் இந்தளவு தூரம் அக்கறை? அதற்கு பிரதான காரணம், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பசுபிக் பிராந்தியத்தில் நடுவில் இருக்கும் தீவுக்கூட்டம் தாய்வான் என்பதால், இயல்பிலேயே தாய்வான் சீனாவின் வசம் செல்லுமாக இருந்தால், அமெரிக்காவை சீனா அங்கிருந்து நேரடியாகத் தாக்க எந்த ஒரு தடையும் இருக்கப்போவதில்லை.

எனவே தாய்வானின் பாதுகாப்பு அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் நேரடி தேசிய பாதுகாப்பிற்கு நேர்விகித சமனாக உள்ளது. எனவே தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடாது என்பதில் அமெரிக்கா முழு மூச்சாக உள்ளது. 

உண்மையில், தாய்வான் தீவுப்பகுதியாக உள்ளதால், சீனா தாய்வான் மீது படையெடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு மிகப்பெரிய கப்பல் பலமும் வள்ளங்கள் போன்ற கடல் போக்குவரத்து தளபாடங்கள் ஏராளம் தேவைப்படும் எனும் ஒரு காரணம் சீனாவை தாய்வான் மீது ஆக்கிரமிப்பதற்கு பின்தங்க செய்யும் எனும்போது அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாய்வானிற்கு உடனடி ஆபத்து இல்லை என்பதே பலரது கருத்து.

ஆனால் அமெரிக்காவின் படை பலம், குறிப்பாக கடற்படைப் பலம் சீனாவின் பலத்துடன் ஒப்பிடும் போது எந்தளவில் உள்ளது? உலக வல்லரசாக இருப்பதோடு உலகின் தலைசிறந்த போர்ப்படைகளைக் கொண்டுள்ள அமெரிக்காவை சீனா முந்திவிட்டதா? ஆம் என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. 

அண்மையில் வெளியாகியுள்ள அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையின் சீன கடற்படை சார் பகுப்பாய்வுத் தொகுப்பின் படி, உலகின் அதிகளவு போர்க்கப்பல்களைக் கொண்டுள்ள நாடு சீனா என்பதை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க கடற்படை பிரதானி அட்மிரல் மைக்கேல் கில்டெ கூறியிருந்ததன்படி, சீனா அதன் குறிக்கோள்களை திடமாகத் தீர்மானித்து அனுமானித்த தேதிக்கு முன்னரே அடைந்து வருகிறது.

இதனால் அதிக வளர்ச்சியடைந்துள்ள பலம் பொருந்திய கடற்படையுடன் இன்று காணப்படுகிறது. சீனாவின் இந்த வளர்ச்சி அமெரிக்காவிற்கு நேரடி சவாலாக உள்ளது எனக் கூறியுள்ளார். 

தொடர்ந்து தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஊடுருவல்களை மேற்கொண்டு வரும் சீனா, இந்த பகுதியில் சேவைக்காக, அதன் சுய தயாரிப்பு j-20 போர் விமானங்களை இணைத்துள்ளது.

அடுத்து j-16D எனும் இலத்திரனியல் போர் விமானங்களையும், z-20 நீர்மூழ்கிக்கப்பல் தாக்குதல் விமானங்களையும் சேவையில் இணைத்துள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

அது மாத்திரமன்றி சீனா அண்மையில் அதன் ஹைப்பர்சோனிக் கப்பல் தாக்குதல் ஏவுகணையான yj-21 ஐயும் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா இன்னமும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் துறையில் பின்னிற்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்கா தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பரிசோதனைகளின் போது தோல்வியடைந்திருந்தன.

மேலும் அமெரிக்கா அதன் கடற்படையை அபிவிருத்தி செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல்கள் வழங்கப்படுவது தாமதமாவதால் சீனாவை விட தற்போது பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக கடற்படைப்பிரிவு அதிகாரிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Recent News