கடந்த சில நாட்களில் ஆஸ்திரேலியாவின் முதன்மையான குடிவரவுத் தடுப்பு முகாம்களில் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சக்கோரிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புலம்பெயர்வு விதியின் கீழ் விசா ரத்து செய்யப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பர் 23ம் தேதியிலிருந்து சிட்னியில் உள்ள வில்லாவுட் தடுப்பு முகாம் மற்றும் மெல்பேர்னில் இருக்கும் குடிவரவு இடைத்தங்கல் முகாம் ஆகியவற்றிலிருந்து பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 22ம் தேதி விசா ரத்து தொடர்பான வழக்கில் ஆஸ்திரேலிய அரசுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகிய நிலையில் இவர்கள் விடுதலைச் செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு குற்றங்களுக்கான மொத்த தண்டனைகள் மூலம் தானாக விசா ரத்து என்பது கூடாது என இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த கேட் பியர்சனுக்கு 10 குற்றங்களுக்காக 4 ஆண்டுகள் 3 மாதங்கள் கூட்டாக தண்டனை விதிக்கப்பட்ட சூழலில் அவரது விசா தானாக ரத்தானது.
இவரது விசா ரத்து பற்றிய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், பியர்சன் ஒரு குற்றத்துக்கு என்று 12 மாதங்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ தண்டிக்கப்படவில்லை. ஆதலால் அவரது விசா “கட்டாய ரத்து” என்பதற்குள் பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், விசாக்களை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பயன்படுத்த உள்துறை அமைச்சரை இத்தீர்ப்பு அனுமதிக்கிறது.
தடுப்பில் உள்ள தனது தரப்பினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், வில்லாவுட் தடுப்பு முகாமிலிருந்து கடந்த 27ம் தேதி 24 பேரும் மெல்பேர்ன் முகாமிலிருந்து 16 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் வில்லியம் லெவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த நடைமுறை மிக வினோதமாக இருப்பதாகக் கூறும் லெவிங்ஸ்டன், தங்கள் விடுதலையை அறிவிக்கும் ஆவணங்களை எதிர்பாரா நேரத்தில் கண்டு சில முகாம் வாசிகள் ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ளார். அதே சமயம், அந்த ஆவணங்களில் அவர்களுக்கு என்ன மாதிரியான விசா வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாத கணக்குப்படி, குடிவரவுத் தடுப்பில் உள்ள 1400 பேரில் 61 சதவீதமானோர் விசா ரத்து செய்யப்பட்டதால் தடுப்பில் உள்ளனர். இவர்கள் சராசரியாக 726 நாட்கள் தடுப்பு முகாமில் கழித்திருக்கின்றனர்.