ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயற்படுவதால் அந்த நாட்டிலும், பிராந்தியத்திலும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையின் தலிபான் மீதான தடைகள் கண்காணிப்பு குழு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தலிபான் அல் ஹைடா , தெஹ்ரீக் ஏ தலிபான் பாகிஸ்தான் ஆகிய இயக்கங்களும் இடையேயான தொடர்பு வலுவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதிக்கு மாறாக பாகிஸ்தான் – தலிபான் எனப்படும் தெஹ்ரீக் ஏ தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு தலிபான்கள் ஆதரவு அளித்து வருகின்றன.
ஒருபுறம் பல பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு, மறுபுறம் ஐ.எஸ். அமைப்பின் கோராசான் பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ் – கே அமைப்பை எதிர்கொள்ள ஐ.நா உறுப்பு நாடுகளிடம் தலிபான்கள் உதவி கோரி வருகின்றனர்.
அல் ஹைடா , பாகிஸ்தான் – தலிபான் அமைப்புக்களுடன் தலிபான்களின் தொடர்பு வலுவாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சியில் பல பயங்கரவாத அமைப்புக்கள் சுதந்திரமாகச் செயற்பட்டு வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தானிலும் , பிராந்தியத்திலும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.