பிரித்தானியாவின் ஹல் பகுதியில் அமைந்துள்ள பொது பூங்கா ஒன்றில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை அந்நாட்டு காவல்துறையினர் வெளியிட்டுள்ளதுடன், 10 நாட்களுக்கு முன்னர் அந்த பூங்காவின் குறிப்பிட்ட பகுதிகள் இந்த விவகாரம் தொடர்பில் மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனித உடல் பாகங்கள் அந்த பூங்காவில் காணப்பட்டதன் பின்னணியையும் விசாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, அடுத்த வாரம் முழுவதும், பூங்காவின் குறிப்பிட்ட பகுதியானது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாலேயே இந்த நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் சமீபத்தில் உயிரிழந்தவர்களுடையது அல்ல எனவும், அந்த பூங்காவின் ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அருகாமையில் அமைந்துள்ள ரயில் பாதையில் ரயில் மோதி உயிரிழந்தவர்களாகவும் இருக்கலாம் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
இருப்பினும், இறந்தவரின் பாலினம், அடையாளம், உயிரிழந்து எத்தனை ஆண்டுகள் என்பது உள்ளிட்ட தகவல் எதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. டிசம்பர் 7ம் திகதி, மதியத்திற்குமேல் சுமார் 6 மணியளவில் இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், ரயில் விபத்தில் சிக்கிய நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்து பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கடந்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலும், காவல்துறையினருக்கு போதுமான தகவல் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.