Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கையில் குறிவைக்கப்படும் இளைஞர்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் குறிவைக்கப்படும் இளைஞர்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மாத்தளை, உக்குவெல பிரதேசத்தில் தோட்டங்களை அண்மித்து வாழும் இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களை தெரிவு செய்து தரகர்கள் மேற்கொள்ளும் சிறுநீரக வியாபாரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு குறிவைக்கப்டும் சிறுநீரகம் மூன்று முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை கொள்வனவு செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான உடல் உறுப்பு விற்பனையினால் மோசமான நிலை உருவாகியுள்ளதாகவும்,சிறுநீரக விற்பனையால் அப்பகுதி மக்கள் அதிகளவில் நோய்வாய்ப்பட்டு கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டப்புற மக்கள் தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்தால் பல்வேறு வகையில் உதவி செய்வதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளித்துள்ளனர்.

சிறுநீரகங்களை கழற்றிய பின்னர் தரகர்கள் பெருமளவு பணத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள சிறு தொகையை பகுதியளவில் தமக்கு தருவதாகவும் உக்குவெல பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உக்குவெல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தோட்ட மக்களிடமிருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரின் சிறுநீரகங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், சிறுநீரகத்தை விற்பனை செய்த பலர் இது குறித்து தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டியுள்ளதாகவும், பாதிப்புகள் குறித்து பேச தயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பில் சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி காஜிமாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சிறுநீரக விற்பனை மோசடியில் பிரதான தரகராக செயற்பட்டு சிறுநீரகங்களை வழங்கியவர்களை ஒருங்கிணைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News