கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) இகழ்ந்த முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன், தற்போது சந்திரயான்-3 மிஷனை மனதாரப் பாராட்டியுள்ளார்.
இந்தியா சார்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவுக்கு சந்திரயான்-3னை கடந்த ஜூலை மாதம் அனுப்பி இருந்தனர். பூமி மற்றும் நிலவு வட்டப்பாதையில் சுமார் 40 நாட்கள், பல லட்சம் கி.மீ தூரம் பயணித்த சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது.
தொடர்ந்து அதில் உள்ள பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளது. இந்த பயணம் திட்டமிட்டபடி சென்று கொண்டு இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பல ஆண்டுகால கடின உழைப்பு உள்ளது.
இந்திய மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகள் இஸ்ரோவின் இந்த முயற்சியை வியந்து பார்க்கின்றனர். ஏனெனில், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் லேண்டரை தரையிறக்கியது இல்லை என்பது பிரதான காரணம். இந்த சூழலில் ஃபவாத் ஹுசைன் சந்திரயான் மிஷனை புகழ்ந்துள்ளார்.“சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் நேரலையில் ஒலிபரப்பு செய்ய வேண்டும்.
மனித குலத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக இது இருக்கும். குறிப்பாக மக்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக, கடந்த 2019-ல் சந்திரயான்-2 தோல்வியை தழுவிய போது இஸ்ரோ மற்றும் மோடி தலைமையிலான இந்திய அரசை அவர் விமர்சித்திருந்தார்.
தெரியாத பிரதேசத்துக்குள் செல்வது புத்திசாலித்தனம் அல்ல என அப்போது அவர் சொல்லி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.