Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் தற்கொலைகள்; ஆண்களே அதிகமாம்! – காரணம் என்ன?

உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் தற்கொலைகள்; ஆண்களே அதிகமாம்! – காரணம் என்ன?

ஜோசப் நயன்

உலகளாவிய ரீதியில் தற்கொலை மரணங்கள் தீவிர சுகாதார பிரச்சினையாக மாறிவருவதுடன் தடுக்க முடியாத சாபக்கேடாக மாறிவருகின்றது

உலகில் இடம் பெரும் ஒவ்வொரு 100 இறப்பிலும் ஒருவர் தற்கொலையால் இறப்பதாக உலக சுகாதர ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் போர், மார்பக புற்றுநோய், மலேரியா, கொலை, எச்.ஐ.வியினால் இறப்பவர்களை விட தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது

அன்றாடம் நாம் கடந்து செல்லும் மரணங்களில் பெரும்பாலான மரணங்கள் எவ்விதமான பாதிப்புக்களையும் எம்மில் ஏற்படுத்துவதில்லை. பிறப்பு என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றோமோ, அதேபோன்று இறப்பு என்பதையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை சாதாரணமாக கடந்து விடுகின்றோம். ஆனால் எமது சூழலில் எமது சமூகத்தில் இடம்பெறும் தற்கொலை மரணங்களை நாம் சாதாரணமாக கடந்து விடுவதில்லை.

பொதுவாக தற்கொலை செய்து கொண்டவர் எம் உறவினறாகவோ, நண்பராகவோ இல்லாவிட்டாலும் அவரது மரணம் எமது மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அவருடைய மரணத்திற்கான காரணத்தை நோக்கி எமது அவதானம் செல்லும், இவ்வாறான மன நிலை சில நேரங்களில் ஒரு சில நாட்களில் மறக்கப்பட்டாலும் சில நேரங்களில் அந்த மன நிலையில் இருந்து மீள்வது கடினமாக இருக்கலாம், அந்த மரணம் மரணத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி மீள முடியாத வலியை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கலாம்.

ஒரு நபர் தன்னுடைய சுய விருப்பத்தின் காராணமாக தன்னுடைய உயிரை மாய்த்து கொள்வதையே நாம் பொதுவாக தற்கொலை என கொள்கின்றோம். தற்கொலை தொடர்பான பல விழிப்புணர் செயற்பாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டாலும் தற்கொலை மரணங்களும் தற்கொலை முயற்சிகளும் அதிகரித்தே செல்கின்றது.

மன ரீதியான தாக்கத்தின் உச்சநிலையில் அதை எதிர்த்து போராட முடியாத நிலையில் பெரும்பாலானவர்கள் மாற்று வழிகள் இன்றி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றார்கள்.

இன்னும் சிலர் மன அழுத்தம் மன ரீதியான தாக்கம் குடும்ப சூழல், விரக்தியான தன்மை போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.

ஆனாலும் தற்கொலையை விட ஆபத்தானது தற்கொலை எண்ணம்.

தற்கொலை எண்ணம் ஒரு நபருக்கு வந்து விட்டால் அவர் தற்கொலை செய்வதற்கான முயற்சிகளை தொடர்சியாக மேற்கொண்டு வருவார். அவ்வாறான தற்கொலை எண்ணத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே இறுதியில் தற்கொலையை கையில் எடுக்கின்றார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் 7,00,000 அதிகமானோர் தற்கொலையால் இறக்கின்றார்கள். அதேநேரம் அதை விட 20 மடங்கு நபர்கள் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு தற்கொலைக்கும், 20க்கும் மேற்பட்ட தற்கொலை முயற்சிகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

15-19 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக தற்கொலை சுட்டிக்காட்டப்படுகின்றது. உலகளாவிய தற்கொலைகளில் 77% வீதமானவை வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றது என அவ் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

நீண்ட நாள் மனநல பிரச்சினை, மனச்சோர்வு, மதுப் பழக்கம் போன்ற தொடர்காரணங்களால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவ்வாறான தற்கொலைகள் அதிகளவில் இடம் பெறுகின்றன.

இன்னும் பல தற்கொலைகள் நெருக்கடியான தருணங்களில் ஏற்படும் மனக்கிளர்ச்சியினால் நிகழ்கின்றன, நிதி சுமை. கடன் தொல்லை போன்ற தொடர்சியான வாழ்க்கை அழுத்தங்களைச் சமாளிக்கும் திறன் குறைவதாலும் உறவு முறிவு அல்லது நாள்பட்ட வலி மற்றும் நோய் காரணமாகவும் தற்கொலைகள் இடம் பெறுகின்றது.

கூடுதலாக மோதல், பேரழிவு, வன்முறை, துஷ்பிரயோகம் அல்லது இழப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு என்பன அதிகளவில் தற்கொலைக்கு வழிநடத்துகின்றது. அத்துடன் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் போன்ற பாகுபாட்டை அனுபவிக்கும் குழுக்களிடையே தற்கொலை விகிதங்களும் அதிகமாக காணப்படுகின்றது என்பதாகவும் சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் பழங்குடி மக்கள், லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கை, இன்டர்செக்ஸ் (LGBTI) நபர்கள் மற்றும் கைதிகள் மத்தியிலும் தற்கொலைக்கு துண்டும் காரணிகள் அதிகமாக காணப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய தற்கொலைகளில் சுமார் 20% வீதமானவை பூச்சிகொல்லிகள் சுய-விஷம் என்பவற்றை பயன்படுத்துவதன் ஊடாக ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள கிராமப்புற விவசாய பகுதிகளில் நிகழ்கின்றன என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றது.

உலகளாவிய ரீதியில் பால் ரீதியான தற்கொலைக்கணிப்பின் படி பெண்களை விட இரண்டு மடங்கு அதிகமான ஆண்கள் தற்கொலையால் இறக்கின்றனர்.

ஒருலட்சம் ஆண்களில் 12.6 ஆண்கள் தற்கொலையால் இறப்பதாகவும் ஒருலட்சம் பெண்களில் 5.4 பெண்களும் தற்கொலையால் இறப்பதாகவும் அறிக்கைகள் குறிப்பிடப்படுகின்றது. (100 000 ஆண்களுக்கு 12.6, (100 000 பெண்களுக்கு 5.4).

ஆண்களிடையே தற்கொலை விகிதம் பொதுவாக அதிக வருமானம் உள்ள நாடுகளில் அதிகமாக உள்ளது. (100 000க்கு 16.5).

பெண்களைப் பொறுத்தவரை, குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (100 000 க்கு 7.1) அதிக தற்கொலை விகிதங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான பின்னனியில் இலங்கையில் இடம்பெறும் தற்கொலைகளை எடுத்துக்கொண்டால் உலகின் மற்ற பகுதிகளை போன்றே பெண்களை விட அதிகளவான ஆண்களே இலங்கையிலும் தற்கொலையால் அதிகம் இறக்கின்றார்கள்.

பதிவாளர் நாயகத் திணைக்களத்தரவின் பிரகாரம் 1948 ஆம் ஆண்டு சுகந்திரத்திற்கு முன்னர் இலங்கையில் தற்கொலை விகிதம் ஒருலட்சம் பேருக்கு 9 இருந்ததாகவும், இது 1970 களில் ஒரு லட்சத்திற்கு 19 ஆகவும் 1980 களின் நடுப்பகுதியில் ஒரு லட்சத்துக்கு 33 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளது.

மிக சமீபத்திய புள்ளி விபரங்களின் படி இலங்கையின் ஒரு லட்சம் நபர்களில் 15 நபர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் தற்கொலையை இல்லாதொழிப்பதென்பது நடைமுறை சாத்தியமற்றதாக கருதப்பட்டாலும் தற்கொலை எண்ணிக்கைகளை குறைத்தல் என்பதும் தற்கொலை முயற்சிகளை தடுத்தல் என்பது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுமேயானல் நாடளவிய ரீதியில் மாத்திரம் இன்றி சர்வதேச ரீதியில் தற்கொலைக்கு எதிரான சிறப்பான பாதுகாப்பு திட்டமாக அது அமையும்.

வளர்முக நாடுகளை போல தற்கொலைக்கு எதிரான சிறப்பான முன்னெடுப்புக்கள் நம் நாட்டில் இல்லாத போதிலும் தற்கொலைகளை குறைப்பதற்கான தீவரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமானதொன்றாகும்.

குறிப்பாக இவ்வாறான தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்பைபார்கிலும் ஒவ்வொரு தனி நபர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதொன்றாகும் அதே நேரம் ஊடகங்களின் செயற்பாடும் கவனிக்கப்படதக்கதொன்றாகும்.

எமது சமூகத்தில் பொதுவாக தற்கொலை தொடர்பான தவறான பார்வைகளும் தவறான புரிதல் மாற்ற முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்கள் கோழைகள் என்ற எண்ணப்போக்கை மாத்திரமே சமூக ரீதியில் பரிமாறிக்கொள்கின்றோம்.

Recent News