இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, பாதீடு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வாக்கெடுப்புடன் முடிவடையும் வரை, அனைத்து அமைச்சர்களும் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விடயங்களை இராஜதந்திர பணிகள் மூலம் கையாளலாம் என்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு 2023 இற்கான பாதீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறும்.
குழு நிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) எதிர்வரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 8 வரை நடைபெறும். மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.