சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உள்ளூர் உணவகம் ஒன்றில் விடுமுறை தினத்தன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சீனச் செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த விபத்தில் பாதிப்படைந்த மேலும் ஏழு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவர் மோசமான நிலையில் உள்ளதாகவும், மற்றைய இருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாகவும் மற்றும் சிலருக்கு பறக்கும் கண்ணாடியால் கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உணவகத்தில் எரிவாயு தொட்டி வெடித்து சிதறியமையே இந்த விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினை தொடர்ந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இதுபோன்ற இடங்களுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போதுள்ள நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் உடனடியாக உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதேவேளை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளிற்காக 100 ற்கும் மேற்பட்ட நபர்களுடன், 20 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், மீட்புப் பணிகள் இன்று(22) அதிகாலை 4 மணியுடன் முடிவடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.