உலகின் பலம்பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் இராணுவ பலம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இராணுவப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை உடன் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பாரியளவில் இராணுவப் படையினரை பராமரிப்பதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளது. மக்களுக்கு உணவு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இராணுவத்தின் உணவுச் செலவு பத்து கோடி ரூபா என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51ம் அமர்வுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான இராணுவ செலவு 373 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஆண்டை விடவும் 14 வீத அதிகரிப்பாகும்.
அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நெதர்லாந்து போன்ற நாடுகளை விடவும் இலங்கையில் இராணுவ ஆளணி வளம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப் படையை மறுசீரமைக்கவும், பாதுகாப்புச் செலவுகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெற்கு ஞாயிறு இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடுகளின் இராணுவ ஆளணி வளம்
இலங்கை – 250000
அவுஸ்திரேலியா – 59000
நெதர்லாந்து – 35000
கனடா – 70000
பிரித்தானியா – 194000
பிரான்ஸ் – 205000
மலேசியா – 115000
ஜப்பான் – 240000
பாகிஸ்தான் – 650000
ரஸ்யா – 850000
இந்தியா – 1450000