முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் கடனை மறுசீரமைக்க கடனாளிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கான இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடன் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கும் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை மறுசீரமைப்பதற்கும் “ஒருங்கிணைக்கும் தளம்“ என்று விபரிக்கப்படும் கூட்டத்தை ஏற்பாடு செய்ய இலங்கை ஜப்பானை நாடியுள்ளது.
எனினும் கடன் வழங்குநர்களிடையே இந்தியா மற்றும் சீனாவின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு சந்திப்பில் இந்தியா மற்றும் சீனாவின் இருப்பு உட்பட சில நிபந்தனைகளை ஜப்பான், இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
அத்தகைய கூட்டம் கூட்டப்பட்டால் அது 22 பெரிய கடன் வழங்கும் நாடுகளின் அதிகாரிகளின் ஒரு முறைசாரா குழுவான பாரிஸ் கிளப்பின் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கியிருக்கும்.
ஜப்பான் பாரிஸ் கிளப்பில் உறுப்பினராக உள்ளது. எனினும் இந்தியாவும் சீனாவும் அந்த குழுவில் இல்லை.
இந்தநிலையில் இந்தியா மற்றும் சீனாவின் பிரசன்னம் இன்றி இந்த சந்திப்பை முன்னெடுக்கத் தயங்கும் ஜப்பான் தரப்பு, அனைத்து கடன் மறுசீரமைப்புகளும் ஒருங்கிணைப்புத் தளத்தின் மூலம் செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு ஏற்பாடுகள் இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச சந்திப்பு குறித்து இலங்கை மற்றும் இந்திய தரப்பு இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியாவும் கொழும்பிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளதாக தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், கடந்த மாதம் தீவு நாட்டிற்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புப் பொதியை அறிவித்த பின்னர், இலங்கையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், கடனாளிகளின் சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.