Friday, November 15, 2024
HomeLatest Newsஇலங்கை வீரர்கள் ஜப்பானில் சாதனை..!

இலங்கை வீரர்கள் ஜப்பானில் சாதனை..!

இலங்கையைச் சேர்ந்த இரு விளையாட்டு வீரர்கள் ஜப்பானில் சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

அந்த வகையில், ஜப்பானில் இடம்பெற்ற 38 ஆவது “ஷிஸுஓக்கா” சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் கயன்திகா அபேரட்ன மற்றும் அருண தர்ஷன ஆகிய இரு வீரர்களுமே சாதனை படைத்துள்ளனர்.

38 ஆவது “ஷிஸுஓக்கா” சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகள் “ப்றீஃபெக்சுரல் ஷிஸுஓக்கா” விளையாட்டரங்கில் 01.05.2023 ஆம் திகதி ஆரம்பமாகி 03.05.2023 ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்ன முதலாம் இடத்தையும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷன 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

3 இறுதிப் போட்டிகளைக் கொண்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கடைசி இறுதிப் போட்டியில் பங்குபற்றிய கயன்திகா 2 நிமிடங்கள், 04.35 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதற்கு பரிசாக 1000 அமெரிக்க டொலர்கள் கயன்திகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் அருண தர்ஷன ஒட்டுமொத்த நிலையில் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்திற்கான 3ஆவது இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அருண தர்ஷன 45.59 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 2ஆம் இடத்தைப் பெற்ற நிலையில் 24 வீரர்கள் பங்குபற்றிய 3 இறுதிப் போட்டிகளுக்குமான ஒட்டுமொத்த நிலையில் தர்ஷன 3ஆம் இடத்தையே பெற்றுள்ளார்.

எனினும் “ஷிஸுஓக்கா” சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News