இலங்கையில் இன சிறுபான்மையினர் வசிக்கும் வறுமைநிலவும் கிராமப்பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு செல்வது அதிகமாக காணப்படுகின்றதுஎன அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் அதன் விளைவுகள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமயா ஒபகட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்விற்கு சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
சிறுவர்களை தொழிலிற்கு அமர்த்துவதை முடிவிற்கு கொண்டுவருவதற்கான சட்ட மற்றும் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் அதன் மோசமான வடிவத்தில் அது இலங்கையில் இன்னமும் தொடர்கின்றது.
சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படாத சுதந்திர வர்த்தக வலயம் என்ற எண்ணக்கரு வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்ற போதிலும் அது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஏனைய பகுதிகளிற்கு விஸ்தரிக்கப்படாததாகவும் காணப்படுகின்றது.
வீடுகளிலும் விவசாய மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறை உட்பட விருந்தோம்பல் சுத்தம் செய்தல் சேவை தொழில்துறை கைத்தொழில்துறை போன்றவற்றில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்கின்றது.
இவ்வாறான சில நடவடிக்கைகளை ஆபத்தானவை என வர்ணிக்கலாம், சுற்றுலாத்துறையில் சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். நாடு கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு சுற்றுலாத்துறை புத்துயிர் பெரும் சூழ்நிலையில் இது கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.
மலையக தமிழர் இலங்கை தமிழர்கள் போன்ற இன சிறுபான்மையினர் வசிக்கும் வறுமை நிலவும் கிராமப்பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு செல்வது அதிகமாக காணப்படுகின்றது.
இந்த பகுதிகளில் சிறுவர்கள் குறிப்பாக மாணவிகள் தங்கள் குடும்பத்தை பராமரிப்பதற்காக பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுகின்றனர்.
பெருந்தோட்ட துறையில் மாணவர்கள் பாடசாலை கல்வியை கைவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது. இதற்கு தரம்குறைந்த கல்வி மற்றும் கல்வி வசதிகளும் காரணம்.
மேலும் பெருந்தோட்ட துறையில் காணப்படும் குறைந்த சம்பளம் ( 1000 ரூபாய்) சிறுவர்கள் வேலைக்கு செல்லும் ஆபத்தை அதிகரிக்கின்றது – குடும்பங்களிற்கு மேலதிக வருமானம் தேவைப்படுவதே இதற்கு காரணம்.
சட்டஅடிப்படையில் பார்த்தால் பெருந்தோட்ட தொழில்துறையில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை என்ற முடிவிற்கு வரலாம். ஆனால் எனினும் மலையகத்தில் வாழும் சிறுவர்கள் தங்கள் குடும்பத்தின் குறைந்த வருமானம் காரணமாக உணவகங்களிலும் ஏனைய உள்ளுர் தொழில்துறைகளிலும் வேலைபார்க்கின்றனர்.
இலங்கையில் நுண்கடன் திட்டங்கள் ஏற்கனவே பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்களை குறிப்பாக குடும்ப பொறுப்பை சுமக்கும் தாய்மார்களை மேலும் கடனிற்குள் சிக்கவைத்துள்ளன.
இதன் காரணமாக கடனை திருப்பி செலுத்துவதற்கான வேறு வழியில்லாததால் சிறுவர்கள் வேலைக்கு செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.
கொவிட் பெருந்தொற்றை தொடர்ந்து சிறுவர்களின் நிலைமை மேலும் கடினமானதாக மாறியுள்ளது . 18 மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டதால் வேலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சில மாணவர்கள் குறிப்பாக கிராமப்பகுதி மாணவர்கள் இணைய வழி கல்வியை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
இதன் காரணமாகவும் சிறுவர்கள் வேலைக்கு செல்வது அதிகரித்தது. மாணவர்களை மீண்டும் கற்றல் நடவடிக்கைகளிற்குள் உள்வாங்குதல் சில பகுதிகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை.