இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இணையத் தொழில் நுட்பத்தின் ஊடாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மட்ட அனுமதியை பெறுவதற்கான மைல்கல்லாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
எனினும் இதில் பங்கு பற்றிய தரப்புக்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
இங்கு கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை ஒரு முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. அத்துடன் நிதி ஸ்திரத்தன்மையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
கலந்துரையாடல் தொடர்;பில் கருத்துரைத்த, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலும் இலங்கையின் நிதிப் பாதுகாப்பை மீட்டெடுக்கும் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையில் இலக்கு ரீதியான சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது:
நிதி சீர்திருத்தம், அரச கடன் நிலைத்தன்மையை மீளமைப்பது,விலை ஸ்திரத்தன்மையை வழமை நிலைக்கு கொண்டு வருவது மற்றும் வெளிப்புற பாதுகாப்பை மீண்டும் உருவாக்குவது மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முக்கிய நிபந்தனையான நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதே அந்த நான்கு அடிப்படைகளாகும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.