Monday, December 23, 2024
HomeLatest Newsஐநா தீர்மானம் - 1.2 பில்லியன் ரூபாவை நிராகரித்தது இலங்கை

ஐநா தீர்மானம் – 1.2 பில்லியன் ரூபாவை நிராகரித்தது இலங்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான, மனித உரிமைகள் பேரவையின் அண்மைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் சபையினால் 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதுடன், அந்தத் தொகையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான 51/1 என்ற தீர்மானம் கடந்த ஒக்டோபரில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

எனினும், குறித்த தீர்மானம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவ்வேளையில் இலங்கை அழைப்பு விடுத்திருந்தது.

“எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் உள்நாட்டு சட்ட செயல்முறைகளில் தலையிடும் வெளிப்புற பொறிமுறையை ஏற்க முடியாது” என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மனித உரிமைகள் பேரவை அமர்வில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த உதவுவதற்காக, 2023 ஆம் ஆண்டிற்கான ஐநாவின் பரிந்துரைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக மற்றும் வரவு – செலவு விடயங்களுக்கு பொறுப்பான ஐ.நா பொதுச் சபையின் ஐந்தாவது குழுவில் இந்த வாரம் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ”சம்பந்தப்பட்ட நாட்டினால் நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் வரையறுக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்று கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Recent News