ஊழியர் ஒருவர் ஒரு நாளில் சுமார் 6 மணி நேரத்தினை கழிவறையில் கழித்தமையால் அவரை பணி நீக்கம் செய்தது சட்டபூர்வமானது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனாவில் உள்ள நிறுவனம் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வாங் என்பவரே இவ்வாறு வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாங் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளதுடன், 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் அல்லாத ஊழியராக நிறுவனம் அவரை நியமித்துள்ளது.
இந்நிலையில் வயிற்று பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், வலியை உணர்ந்துள்ளார்.
அதன் பின்னர் 2015 ஜூலை தொடக்கம் வேலை நேரத்தில் ஒரு நாளைக்கு 2,3 தடவைகள் கழிவறைக்கு செல்வதுடன் ஒவ்வொரு முறையும் 47 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை கழிவறையில் இருந்துள்ளார்.
இதனால்,அந்த நிறுவனம் 2015 செப்டம்பர் 7 – 17 ஆம் திகதி வரை வாங் எவ்வளவு நேரம் கழிப்பறை சென்றுள்ளார் என கணக்கெடுத்த நிலையில், வேலை நேரத்தில் சுமார் 6 மணி நேரம் கழிவறையிலே அவர் இருந்துள்ளார் என்பது தெரிய வர செப்டம்பர் 23 இல் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க சோம்பேறித்தனம், முன்னதாகவே வேலையில் இருந்து செல்லுதல், சரியான விளக்கமளிக்காது விடுமுறை எடுத்தல் போன்ற காரணங்கள் ஊழியர்களின் கையேட்டில் கூறப்பட்ட போதிலும், வாங் தன்னை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறித்த வழக்கை நீண்ட காலமாக விசாரித்த நீதிமன்றம், நிறுவனம் வாங்-ஐ வேலையில் இருந்து நீக்கியது சட்டப் பூர்வமானது எனவும் மணிக்கணக்கில் கழிவறையில் இருந்தது மனித உடலியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.