இந்தியா 75வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடி வருகிறது. அதனைப் போற்றும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது இல்லத்திலும், சமூக ஊடகப் பக்கத்திலும் இந்திய தேசிய மூவர்ண கொடியை பறக்கவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இவ்வாறான நிலையில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பூமியில் இருந்து 30 கிலோ மீட்டர் (1,06,000 அடி) உயரத்தில் இந்திய தேசியக் கொடியை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு பறக்கவிட்டுள்ளது.
இதேவேளை சுதந்திர தினத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து 750 பெண் மாணவிகளால் AzadiSAT உருவாக்கப்பட்டு சுதந்திர தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களின் சுயவிவர புகைப்படத்தில் இந்திய தேசிய கொடியை வைத்துள்ளனர்.
மேலும் பலர் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை தங்களது வீட்டிலும் பறக்கவிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட எல்லோர் வீட்டிலும் தேசிய கொடி என்ற திட்டத்தின் பிரச்சாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு நாட்டிற்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி, எல்லையற்ற உலகத்திற்கான விழிப்புணர்வை குழந்தைகளிடையே பரப்பும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.