Thursday, December 26, 2024
HomeLatest Newsஅனுராதபுரம், பொலன்நறுவை ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்கள் சென்று வழிபட முடியாது- சுமந்திரன் சுட்டிக்காட்டு!

அனுராதபுரம், பொலன்நறுவை ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்கள் சென்று வழிபட முடியாது- சுமந்திரன் சுட்டிக்காட்டு!

வெடுக்குநாறி ஆதிசிவலிங்கத்தை மீள நிர்மாணிப்பதற்கான உத்தரவினை பிறப்பிப்பதற்கு பிறிதொரு தினத்தில் விண்ணப்பம் ஒன்றை செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் முன்நிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான புகைப்பட ஆதாரங்களை கொலிசாரே நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தன்னால் முன்வைக்கப்படுகின்ற விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பதற்காக அரச சட்டத்தரணியின் உதவியை பொலிசார் நாடியுள்ளதாகவும் அதற்காக பிறிதொரு தினத்தையும் கோரியிருந்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் மத வழிபாடு என்பது எவராலும் மட்டுப்படுத்த முடியாத உரிமை என்பதுடன் மரத்தையோ, கல்லையோ வழிபடலாம் அதற்கு பூரண உரித்துள்ளது.

அந்த மரம் வனப்பிரதேசத்தில் இருப்பதால் வணங்க முடியாது என எவரும் கூறமுடியாது. ஒரு கல் தொல்லியலுக்குரியது என்பதற்காக அதனை வணங்க முடியாது என எவரும் கூற முடியாது.

அவ்வாறு சொல்வதாக இருந்தால் அனுராதபுரத்திலும், பொலன்நறுவையிலும் சென்று எவரும் வழிபட முடியாது.

இந்த விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார்.

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News