இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
காவல்துறையினர் மேலதிக ஆதாரங்களை திரட்டுவதற்காக தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் வழக்கை சிட்னி ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக அஸ்திரேலியா சென்றிருந்தபோது, அரட்டை செயலியான டிண்டரில் அறிமுகமான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.
சிட்னியில் உள்ள ஒரு மதுபானசாலை அப்பெண்ணுடன், தனுஷ்க மது அருந்தியதாக காவல்துறை கூறுகிறது.
அதன்பின்னர் சிட்னியின் கிழக்கு புறநகரில் உள்ள ரோஸ் பே விடுதிக்கு இருவரும் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு பாலியல் உறவில் ஈடுபடும்போது தனுஷ் குணதிலக்க தன்னை மிகவும் வலுக்கட்டாயமாக கழுத்தை நெரித்ததாகவும், தான் உயிருக்கு பயந்ததாகவும், ஆணுறை அணியுமாறு அவரிடம் கூறிய போதிலும், அதனை தனுஷ்க மறுத்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கு, இன்று மீண்டும் சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் டேவிட் பிரைஸ், இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
பெப்ரவரியில் அவரது சட்டத்தரணி முன்னிலையானால் தனுஷ்க நீதிமன்று வரவேண்டிய அவசியமில்லையென பிரதிவாதிககு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நிபந்தனைகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை எதிர்கொண்டுள்ள தனுஷ்க, தொடர்ந்தும் பிணையில் உள்ளார்
அத்துடன், தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்ணை தொடர்பு கொள்ள அவருக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் அவர் சமூக ஊடகங்கள் அல்லது அரட்டை செயலிகளையும் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ள நிலையில் நிபந்தனைகளில் 200,000 டொலர் ரொக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.