Thursday, January 23, 2025
HomeLatest Newsதிரும்பி வந்துட்டேனு சொல்லு : மக்கள் முன்னால் மீண்டும் மஹிந்த!

திரும்பி வந்துட்டேனு சொல்லு : மக்கள் முன்னால் மீண்டும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்களின் எழுச்சியினை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த பதவி விலகல் அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகல் என அடுத்தடுத்து மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் அரசியல் பலத்தில் சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில் மக்கள் எழுச்சி போராட்டம் மற்றும் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு , புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் என அடுத்தடுத்து அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன.

இவ்வாறான நிலையில் அரசியல் ரீதியான அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த சில மாதங்களாக மௌனம் காத்த ராஜபக்சவினர் தற்போது மீண்டும் தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் தலைகாட்டாது ஒதுங்கியிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தமக்கான ஆதரவை பெறும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மீள்பிரவேசமாக கருதப்படும் மக்கள் சந்திப்புக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் 3ஆவது தொகுதிக்கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பங்கேற்புடன் புத்தளம் ஆராய்ச்சிக் கட்டுவில் நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவினால் கட்சியின் 3ஆவது தொகுதிக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மீண்டும் மக்கள் மத்தியில் தமது ஆதரவினை பெற்றுக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி ராஜபக்சக்களின் செல்வாக்கை சர்வதேசத்திற்கு காட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த கூட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் திட்டமிடல்களின் பின்னால் முன்னாள் நிதியமைச்சரும் மஹிந்தவின் சகோதரனுமாகிய பசில் ராஜபக்ச மறைமுகமாக செயற்பட்டு வருவதாகவும் அரசியற் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் ராஜபக்சக்கள் மீண்டும் பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவார்களா என்பது தொடர்பில் காலம் பதில்கூறும். .. அதுவரை காத்திருப்போம்.

Recent News