கொழும்பு – பொரளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் விதைப்பை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடி தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் போதே இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புளுமண்டல் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞரிடமிருந்து ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாவிற்கு விதைப்பை ஒன்றை கொள்வனவு செய்ய தயாராக இருந்த நிலையில், சிறுநீரக தானம் செய்தவருக்கு பணம் செலுத்தாத காரணத்தினால் அவர் தனது விதைப்பையை தானமாக வழங்க மறுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளூமண்டல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் விதைப்பை தானம் தொடர்பாக வைத்தியசாலையை தொடர்பு கொண்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்ட போதும் பணம் வழங்கப்படாததால் சந்தேகம் ஏற்பட்டு அவர் அதனை வழங்க மறுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
புகைப்படம் எடுத்தல் என்ற போர்வையில் இந்த சிறுநீரகம் மற்றும் விதைப்பை மோசடி இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு சிறுநீரகங்களைப் பெற்று விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் ரஞ்சிந்திர ஜயசூரியவிடம் நேற்று அறிவித்தருந்தமையும் குறிப்பிடத்தக்கது.