Thursday, December 26, 2024
HomeLatest Newsஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா ஆதரவு!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா ஆதரவு!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 77வது பொதுச் சபையில் உரையாற்றிய லாவ்ரோவ், “ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயகமாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள்.

அவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

ஐ.நா பேரவையில் உரையாற்றிய லாவ்ரோவ், உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்படும் வாக்கெடுப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்ற, பொறுப்பற்ற செயல் என குற்றம் சாட்டினார். போரினால் ஏற்படும்.

நெருக்கடிகள் அதிகரித்து வருவதாகவும், சர்வதேச நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாகவும், குறிப்பிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர், நேர்மையான முறையில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் சமரச முயற்சியையும் மேற்கொள்வதற்கு பதிலாக, மேற்கு நாடுகள் “சர்வதேச அமைப்பின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து” எதிர்மறையான போக்குகளை ஊக்குவிக்கின்றன என செர்ஜி லாவ்ரோவ் மேலும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறும் வகையிலும், ஏழை நாடுகளை பாதிக்கும் வகையிலும் போடப்பட்டுள்ள “சட்டவிரோத ஒருதலைப்பட்ச தடைகள்” மூலம் அமெரிக்கா, உலகத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். ஏழை நாடுகளுக்கான, மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் உணவு இறக்குமதி, இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் செர்ஜி லாவ்ரோவ் மேலும் கூறினார்.

முன்னதாக, இந்தியா மற்றும் இதர 31 நாடுகள் கையெழுத்திட்டு வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐநா சபையை தற்போதைய தேவைக்கு ஏற்ப, உலக யதார்த்தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பாதுகாப்பு பாதுகாப்பு கவுன்சிலில் அவசர மற்றும் விரிவான சீர்திருத்தம் அவசியம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தில் முன்னேற்றம் இல்லாத நிலை, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையை ஏற்படுத்துகிறது எனவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recent News