மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் மொபைல் போன்களை உபயோகிக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று 18 வயது நிரம்பாதவர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு விதர்பா பகுதியில் யவத்மால் மாவட்டத்தில் உள்ள கிராமம் பான்சி. இந்த கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்று நடைபெற்றதாக தெரிகிறது.
அதில், கிராமத்தில் வசித்துவரும் குழந்தைகளிடையே மொபைல் பயன்பாடு அதிகரித்து வருவதையும் அதை கட்டுப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள 18 வயது நிரம்பாதவர்கள் செல்போன்களை பயன்படுத்துவதை தடை செய்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்கு கிராம மக்களும் ஒப்புதல் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து, கிராம நிர்வாக தலைவர் கஜானன் டேல், பான்சி கிராமத்தில் 18 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறார்.