அமெரிக்காவின் முக்கியமான வர்த்தக நகரம் நியூ யார்க். சர்வதேச அளவிலும் மிகப்பெரிய நிதி மற்றும் வர்த்தக மையமாக நியூ யார்க் திகழ்கிறது.
பங்குச் சந்தைகள், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வங்கிகள், முதலீட்டு வங்கிகள் போன்றவற்றால் நிரம்பியது நியூ யார்க் நகரம். இதுமட்டுமல்லாமல், உலகளவில் அதிக பணக்காரர்களை கொண்ட நகரமாகவும் நியூ யார்க் உள்ளது.
ஆனால், அண்மைக்காலமாக நியூ யார்க் நகரம் பெரும் பணக்காரர்களுக்கு சாதகமானதாக இல்லை எனவும், இதனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெரும் பணக்காரர்கள் நியூயார் நகரத்தை விட்டே வெளியேறி வருவதாகவும் என நியூ யார்க் மாகாணத்தின் அரசு கணக்கர் தாமஸ் டினபோலி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை சூழலை சமாளித்து வரும் நிலையில், பெரும் பணக்காரர்கள் நியூ யார்க்கை விட்டு வெளியேறி வருவதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
நியூ யார்க்கில் 1 மில்லியன் டாலர் முதல் 5 மில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டி வந்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் 11% சரிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் அதிக வரி மற்றும் கட்டணங்களே அவர்கள் வெளியேற காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பணக்காரர்களை நியூ யார்க்கிலேயே இருக்க வைக்க முடியாமல் திணறும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணக்காரர்கள் நியூ யார்க்கை விட்டு வெளியேறி வருவதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும், இது அனைவருக்குமான பிரச்சினை எனவும் தாமஸ் தெரிவித்துள்ளார். தற்போது நியூ யார்க் மாகாணம் 148 மில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.
கல்வி, மருத்துவம், பென்சன் போன்றவற்றுக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் கடன்கள் தாறுமாறாக எகிறும் சூழலும் உருவாகியுள்ளது.
நியூ யார்க் மாகாண அரசின் மொத்த தனிநபர் வருமான வரி வருவாயில் 40% வருவாய் முன்னிலையில் உள்ள 1% பெரும் பணக்காரர்களிடம் இருந்தே வருகிறது. எனவே, பணக்காரர்கள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாமஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.