இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மருந்துப் பொருட்களும் ஜூலை 1 ஆம் திகதி முதல் தரப்பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இறக்குமதி செய்யப்படும் என ஆப்பிரிக்க நாடான காம்பியா தெரிவித்துள்ளது.
அந்த நாட்டில், கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்ட 70 சிறார்கள் உயிரிழந்தனர். அதில், அதிகளவு 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களே உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்திய மருந்துகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட முதல் கட்டுப்பாடாக இது கருதப்படுகின்றது.
அந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால், டைஎத்திலீன் கிளைக்கால் போன்ற வேதிப்பொருட்களின் அளவு அதிகமாக காணப்பட்டதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டே சிறுவர்கள் உயிரிழந்ததாக உலகச் சுகாதார நிறுவனம் இந்தியாவிடம் தெரிவித்தது.
இந்நிலையில், 71 மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இந்திய சுகாதார அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளதுடன், 18 நிறுவனங்களை மூடவும் அது உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மருந்துகளின் தரத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்றும் தரமான மருந்துகளின் தயாரிப்பை உறுதி செய்வதற்காக பகுப்பாய்வு செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளதாகவும் இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் 3,000 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.