பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாகவும், ரஷ்யாவில் உண்டான ஆயுத கலகம் தொடர்பாகவும் ரஷ்ய அதிபர் புடினிடம் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் குறித்து ரஷ்ய அரசின் நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில், ரஷ்யாவில் ஆயுதக் கலகம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிபர் புடின் எடுத்த நடவடிக்கைகளிற்கு மோடி தனது ஆதரவை வெளிப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் தொடர்பாகவும் இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்ய போர் நிலைமை குறித்து விவாதித்த வேளை பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை மட்டுமன்றி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஜி 20 போன்றவற்றில் தமது நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.