Monday, January 27, 2025
HomeLatest Newsமூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க இலங்கை தனியார் பேருந்து சங்கம் தீர்மானம்

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க இலங்கை தனியார் பேருந்து சங்கம் தீர்மானம்

மே மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பொது நிர்வாக முடக்கத்திற்கு, ஒத்துழைப்பு வழங்கவேண்டுமாயின், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களிடம், 3 கோரிக்கைகளை முன்வைக்க இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரசதுறை தொழிற்சங்கங்கள், வேதனத்தைப் பெற்றுக்கொள்ளாமல், இந்த பொது நிர்வாக முடக்கத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவிப்பது, தங்களது முதலாவது நிபந்தனையாகும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ஏனெனில், எமது தொழிற்சங்கம் வேதனமின்றியே இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனவே, அந்த தொழிற்சங்கங்களும், இதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

இது குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு இன்று மாலை எழுத்துமூலம் அறியப்படுத்த உள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கனியவளக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளது.

அரசாங்கம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 6ஆம் திகதி இந்த பொது நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக, பேருந்து சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்க மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தில், 30 இற்கும் அதிகமான தொடருந்து தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக, தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் எஸ்.பீ. வித்தானகே தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த தினத்தில் தொடருந்துகள் முழுமையாக சேவையில் ஈடுபடமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், தொடருந்து இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள், இந்த பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Recent News