தமிழ் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்கு முறைகளை மறைத்து, சர்வதேசத்துக்கு பொய்யான விடயங்களை கூறும் செயற்பாடுகளை அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், படுகொலைகள், ஆக்கிரமிப்புக்கள், உண்மைக்கு மாறான விடயங்களை சர்வதேச மனித உரிமைப் பேரவையில் தெரிவித்தல் போன்ற விடயங்களை அரசு சார்பாக அங்கு சென்றவர்கள் கூறி வருகின்றனர்.
அதிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் பல பொய்களை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களின் 82 வீதமான பணிகளை நிறைவு செய்துள்ளோம் என்று அவர் கூறி இருக்கின்றார். மாறாக புலனாய்வுத் துறையினர் அவர்களை வெருட்டிய சம்பவங்களே இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் எதுவும் நடைபெறவில்லை. ஆக்கிரமித்த காணிகளை விடுவித்துள்ளோம் என்று பலவாறான பொய்கள் சர்வதேசத்திடம் கூறி வருகின்றனர். இது தவிர 46:1 தீர்மானத்தை வலுவிளக்கச் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் நாம் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.- என்றார்.