Saturday, May 4, 2024

6 மாதங்களில் சடுதியாக அதிகரித்த மக்கள் தொகை…!துபாயில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை..!

துபாயில் மக்கள் தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி 2020 ஆண்டு அந்நாட்டின் மக்கள் தொகை சரிவடைந்துள்ளது.

ஆயினும், அதனைத் தொடர்ந்து நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி மீண்டும் அந்த நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

அத்துடன், துபாய் அரசு கொரோனா தொற்றை சமாளிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இவ்வாறான, முயற்சிகள் மூலமாக அங்கு மக்கள் தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

அதாவது, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்த மக்கள் தொகை, தற்பொழுது 36 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், துபாயில் மக்கள் தொகை கடந்த ஒரு ஆண்டில் 89 ஆயிரத்து 196 ஆகவும், கடந்த 18 மாதங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 595 ஆகவும் அதிகரித்துள்ளது.

அது மட்டுமன்றி,அங்கு சனத் தொகை கடந்த 1960 ஆம் ஆண்டு இருந்ததை காட்டிலும் நகர்ப்பகுதியில் 80 மடங்கும், கிராமப் பகுதிகளில் 170 மடங்கும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வெகுவாக அதிகரித்து வரும் மக்கள் தொகையினை கருத்திற் கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் அங்கு வீட்டு வசதிக்கான தேவைப்பாடுகளும் அதிகரித்து காணப்படுவதால் பொருளாதார மேம்பாடும் அதிகரித்துள்ளது.

மேலும், துபாய் நகர்ப்புற திட்டம் 2040 இன் அடிப்படையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை மேம்படுத்தவும் மற்றும் வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos